மனதின் இடைவிடா தீர்மானங்கள்

நான் மிகவும் நேசிக்கும் ஜென் கதை ஒன்று உள்ளது. நண்பர்கள் மூவர் காலைநேரத்தில் உலாவ சென்றிருந்தினர். அப்போது அவர்கள் திடீரென மலையில் ஜென் துறவி ஒருவர் நின்றிருப்பதை கண்டனர்.


அந்த மூன்று நண்பர்களில் ஒருவன், “அவர் அவருடைய நண்பர்களுடன் வந்திருக்க வேண்டும், இவர் அவர்களை விட முன்னால் வந்திருக்க வேண்டும். அதனால் இவர் அவர்களுக்காக காத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினான்.


இன்னொருவன், “நீ கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. ஏனெனில் அந்த மனிதரை பார்க்கும் போது ஒரு விஷயத்தை என்னால் நிச்சயமாக கூற முடியும். அவர் யாரோ ஒருவருக்காக காத்திருக்கவில்லை என்பதே அது. ஏனெனில் அவர் ஒருபோதும் பின்னால் திரும்பி பார்க்கவில்லை. அவர் வெறுமனே ஒரு சிலையைப் போல நின்று கொண்டிருக்கிறார். தனியாக விடப்பட்டு மற்றவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் யாராக இருந்தாலும் சிறிது நேரத்திற்கு ஒருமுறை அந்த நபர் வந்துவிட்டாரா இல்லையா என்று பார்ப்பார்கள். ஆனால் இவர் நகரவே இல்லை . 


அவர் எந்த நண்பனுக்காகவும் காத்துக் கொண்டிருக்கவில்லை. இந்த துறவியை நான் அறிவேன். அவரிடம் ஒரு பசுமாடு இருக்க வேண்டும், அந்த பசு இந்த அடர்த்தியான காட்டிற்க்குள் தொலைந்து போயிருக்க வேண்டும். இதுதான் இருப்பதிலேயே மிகவும் உயரமான இடம், எனவே அங்கிருந்து அவரால் இந்த காடு முழுவதையும் பார்த்து அந்த பசு எங்கிருக்கிறது என்று கண்டறிய முடியும் என்று அவர் அங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் ” என்றான்.


மூன்றாவது நபர், " உன்னுடைய சொந்த வாதத்தை நீயே மறுத்துவிட்டாய். அவர் பசுவை தேடிக் கொண்டிருந்தால் அவர் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருப்பார், அவர் ஒரு திசையை பார்த்தபடி வெறுமனே ஒரு சிலையைப் போல அங்கு நின்று கொண்டிருக்கமாட்டார். தொலைந்து போன பசுவை தேடும் வழி இதுவல்ல “ என்று கூறினான். அவன், “ எனக்கு தெரிந்த வகையில் அவர் அவருடைய காலை நேர தியானத்தை செய்து கொண்டிருக்கிறார் “ எனக் கூறினான்.


ஆனால் மற்ற இருவரும், " ஜென்னின் அடிப்படை தத்துவமே நீ எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம், எதை செய்து கொண்டிருந்த போதிலும் தியானம் செய்யலாம் என்பது தானே. எனவே அந்த மலைக்கு அதிகாலையில் குளிரில் சென்று நின்று கொண்டு தியானம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டார்கள். “ அவர் அவருடைய கதகதப்பான மடாலயத்தில் அவர்களுடைய தனிச்சிறப்பு வாய்ந்த தியான ஆலயத்தில் தியானம் செய்திருக்க முடியும். அவர் அங்கு இருந்திருக்கலாம் - மலைக்கு செல்ல வேண்டிய தேவை என்ன ? இல்லை இதை நாங்கள் ஒத்துக் கொள்ள முடியாது " என்று கூறினார்கள்.